என்னை முதல்வராக அடையாளம் காட்டியது புரட்சித் தலைவி அம்மா, உங்களை முதல்வராக்கியது சசிகலா''- இது ஓ.பன்னீர் செல்வத்தின் உரத்தகுரல்.
‘‘உங்களையும் முதல்வராக்கியது சசிகலாதான், என்னை முதல்வராக்கியதும் சசிகலாதான்''இது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆவேச பதிலடி.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அதிமுக செயற்குழுகூட்டம் நடந்தது. அதில் வரும் சட்ட மன்றத் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளராக அதிமுக சார்பில் களமிறங்குவது என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே புகைந்துகொண்டே இருந்த மோதல் வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. இந்த மோதலில் சிறையில் இருக்கும் சசிகலாவின் பெயர் எதிரொலித்ததுதான் ஆச்சரியம்!
ஆக என்னதான் இவர்கள் சசிகலாவை கட்சியில் இருந்து விலக்கி வைத்திருப்பதாகச் சொன்னாலும் சசிகலா என்ற பெயர் இன்னமும் அதிமுகவில் ஆட்டிப்படைப்பதாகவே இருக்கிறது. இன்றைய சூழலில் சசிகலாவால் கட்சியிலும் ஆட்சியிலும் வளர்த்துவிடப்பட்டவர்கள் யார் என்று அதிமுக வட்டாரங்களில் கேட்டு தகவல் திரட்டினோம். இந்த பட்டியல் மிகமிக நீளமாக உள்ளது. 75 எம்.எல்.ஏக்கள், பதினோரு மந்திரிகள் சசிகலாவின் ஸ்லீப்பர் செல்களாக இன்றும் இருக்கிறார்கள் என்றுதான் தொடங்கினார்கள் அந்த வட்டாரத்தினர்.
1989&இல் நடந்த சம்பவங்களால் ஜெயலலிதா அரசியலில் இருந்தே விலகும் மனநிலையில் இருந்தபோது, அவரை மனம்மாற்றி அரசியலில் நீடிக்க வைத்த சக்திகளில் அவருடனே இருந்த சசிகலா முதன்மையானவர். போயஸ் இல்லத்தில் இருந்து கணவர் நடராசன் வெளியேற்றப்பட்டபோதும், ஜெ.வுடனே இருந்தவர். முன்னதாக சசியின் குடும்பமே ஜெவின் அருகில் இருந்து அவருக்கு உதவி செய்துகொண்டிருந்தது. இதில் அதிமுகவின் பொருளாளர் என்ற அளவில் நம்பிக்கையைப் பெற்று உயர்ந்தவர் டிடிவி தினகரன். வளர்ப்பு மகனாக தத்தெடுக்கப்பட்ட சுதாகரன், பின் கைவிடப்பட்டார். டிடிவிக்கும் இந்த நிலையே ஏற்பட்டது. இப்படி சசிகலாவே சிலமுறை விலக்கப்பட்டாலும் ஜெ.வின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக கூடவே இருந்து வந்திருக்கிறார். அதிமுக கட்சியின் இன்றைய பிரபலங்கள் பலரை கண்டுபிடித்து பதவிகள் கொடுத்து வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அதிகமே. இவரது உறவினர்களான ராவணன், திவாகரன், மருத்துவர் வெங்கடேஷ் போன்றவர்கள் வழியாக உள்ளே வந்தவர்களும் இதில் சேர்த்தி.
''ஆனால் முந்தைய தேர்தல்களில் சீட் கொடுப்பதில் சசிகலாவின் ஆதிக்கம் இருந்தது உண்மைதான். 2016 தேர்தலை அப்படிச்சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. அதில் வேட்பாளர் தேர்வு நேர்காணலை உடல் நிலை சரியில்லாதபோதும் ஜெயலலிதாவே முன்னின்று நடத்தினார். சசிகலா உடன் இருந்தாலும்கூட அவரது செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன. உடல்நலம் சரியில்லையே, வேறு யாரையாவது இந்த நேர்காணல்களை நடத்த சொல்லாமே என்றபோது, 'யாரைத்தான் நம்புவது?' என்று வேதனைப்பட்டார் ஜெயலலிதா'' என்று தெரிவிக்கிறார் விஷயமறிந்த ஓர் பத்திரிகையாளர்.
சசிகலாவால் ஆதாயம் பெற்றவர் என்றால் எடுத்த எடுப்பிலேயே முதலில் ஞாபகம் வருவது ஓ பன்னீர்
செல்வம் பெயர்தான். பெரியகுளம் நகரச்செயலராக இருந்தவர், அங்கே டிடிவி தினகரன் மக்களவைக்குப் போட்டியிட்டபோது தேர்தல் பொறுப்பாளராக இருந்து நம்பிக்கையைப் பெற்றவர். இதனாலேயே அவருக்கு 2001 தேர்தலின் போது போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது. அந்த ஆண்டு நீதிமன்ற தண்டனை காரணமாக ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாத நிலையில் அந்த பதவிக்கு பன்னீர்செல்வம் அமர வைக்கப்பட்டதில் முழு பின்னணியில் இருந்தவர் சசிகலாதான். இதன்பின்னர் 2014&இல் குன்ஹா தீர்ப்பு வந்தபோதும், 2016&டிசம்பரில் ஜெயலலிதா இறந்த அன்றே நள்ளிரவில் அவர் பதவியேற்றபோதும் சசிகலாவின் ஆதரவு இருந்தது.
எடப்பாடியைப் பொறுத்தவரை அவர் ஜெயலலிதாவின் ஆரம்பநாட்களான 1989 சேவல் சின்ன காலகட்டத்திலேயே எம்.எல்.ஏவாகத் தேர்வானவர். ஆயினும் அமைச்சர் பதவி ஏதுவும் அவர் இரண்டாவது முறையாகத்தேர்வான 1991&96 கால கட்டத்தில் வழங்கப் பட்டிருக்க வில்லை. 2011&இல் அதிமுக ஆட்சி அமைந்தபோது நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதின் பின்னணியில் சசிகலா ஆதரவு இருந்தது என்பதுதான்
கட்சிக்காரர்கள் சொல்லும் செய்தி. பின்னர் கூவத்தூரில் அவரை என் தம்பி எடப்பாடி என்று அழைத்து சசிகலா ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார். செங்கோட்டையனையே முதல்வராக்க சசிகலா தரப்பு விரும்பியதாகவும் ஆனால் அவர் மறுத்துவிட்ட நிலையில் எடப்பாடியிடம் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டதாகவும் இன்றுவரை ஒரு பேச்சு ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. ‘தேவர் சமூகத்தில் இருந்து கவுண்டர் சமூகத்திடம் அதிகார மாற்றத்தை சசிகலா செய்துவிட்டுப்போனதில் இருந்த சூட்சுமமே இன்றும் அதிமுக ஆட்சி நிலைக்கக் காரணம். அதன் பின்னணியில் பல்வேறு அரசியல் இழைகள் ஓடுகின்றன' என்கிறார் விமர்சகர் ஒருவர்.
இன்றைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக பல நெருக்கடிகளுக்கு இடையிலும் கோலோச்சிவரும் விஜயபாஸ்கர், மன்னார்குடி ஆதரவு அரசியலால் முன்னெடுக்கப்பட்டவரே. சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக்கல்லூரி மாணவராக இருந்தபோது கடலூர் மாவட்ட மாணவரணி செயலாளராக ஆனவர், பின்னர் சென்னைக்கு மருத்துவராகப் பணிபுரியவந்து, டாக்டர் வெங்கடேஷ் அறிமுகம் மூலமாக 2001 தேர்தலில் சீட் பெற்று வென்றார். தொடர்ந்து தீவிரமாக செயல்பாட்டில் இருந்தாலும் பல்வேறு உள்ளூர் சர்ச்சைகளையும் சந்திக்க நேர்ந்தது. 2011 தேர்தலில் சீட் மன்னார்குடி ஆசியில் கிடைத்தாலும் 2013&ல்தான் அமைச்சர் பதவி கிடைத்தது. சட்டசபையில் 2ஜி வெடி என்று பேசி ஜெயலலிதாவை சிரிக்கவைத்து சுகாதாரத்துறை அமைச்சரானவர் இன்றுவரை அதே பதவியில் இருக்கிறார்.
கீழத்தஞ்சை மாவட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே ஒளிவு மறைவில்லாமல் மன்னார்குடி குடும்ப ஆசியால் அரசியலில் முன்னெடுக்கப்பட்டவர் ஓ.எஸ்.மணியன். அவருக்கு முதல்பதவியே ராஜ்யசபா எம்பி. எல்லாதேர்தல்களிலும் போட்டியிட வாய்ப்பு என்று ஆசிர்வதிக்கப்பட்டவர். 2016 தேர்தலில் முதல்முறையாக எம்.எல்.ஏ தேர்தலில் வெல்லமுடிந்ததும் கைத்தறித்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. எந்த இடத்திலும் அவர் மன்னார்குடி குடும்ப எதிர்நிலைப்பாடு
எடுக்காமலும் வாய்வார்த்தை விடாமலும் செயல்படுகிறவர். சசிகலா மீண்டும் கட்சிக்கு வருவாரா என்றபோது அது மேலிடம் எடுக்கவேண்டிய முடிவு என்று சொல்லக்கூடிய அளவுக்குத் தெளிவானவர்.
கூட்டுறவுத்துறையில் இரண்டாம் முறையாக அமைச்சராக இருந்துகொண்டிருக்கும் செல்லூர் ராஜு, மதுரையில் பழக்கடை பாண்டி அறிமுகம் மூலம் கட்சிக்குள் நுழைந்து வளர்ந்தவர். டிடிவி தினகரனால் அடையாளம் காணப்பட்டு மன்னார்குடி வழியாக மாவட்டச்செயலாளர் பதவி வாங்கினார். 2011 தேர்தலில் சீட்டும் வாங்கி ஜெயித்த கையோடு மந்திரி பதவியும் வழங்கப்பட்டதில் சசிகலாவின் கை இருந்தது என்பதை கட்சிக்காரர்கள் மறுப்பதற்கில்லை!
உணவு அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடிக்காரர். நன்னிலத்தில் நின்று 2011&ல் வென்றாலும் சில மாதம் காத்திருந்து அமைச்சர் பதவி பெற்றவர். இவரது மாவட்டச்செயலாளர் பதவி, மாநிலங்களவைப் பதவி, அமைச்சர் பதவி என எல்லாவற்றுக்கும் காரணமாக அமைந்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன். மிகப்பெரிய மன்னார்குடி குடும்ப விசுவாசியாக இருந்தவர், சசிகலா குடும்ப உறுப்பினர்களை ஜெயலலிதா வெளியே அனுப்பிய காலகட்டத்தில் அப்படியே பல்டி அடித்து திவாகரனை நிராகரித்தவர். இருப்பினும் 2016-ல் மீண்டும் மந்திரியாக நியமிக்கப்பட்டு தொடர்கிறார்.
அதிமுகவில் மீன்வளம், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயகுமார் இன்று ஊடகங்களில் சசிகலாவுக்கு எதிரான கருத்துகளைச் சொன்னவராக இருந்தாலும் ஒரு காலத்தில் அவருடைய தயவால் ஆதாயங்களைப் பெற்றவர்தான். ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகி கட்சிப்பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இருந்தவர். 2016 - ல் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதும் போட்ட முதல் உத்தரவே மாநில மீனவரணிச் செயலாளர் பதவியை மீண்டும் ஜெயகுமாருக்கு அளித்ததாகத் தான் இருந்தது என்பதைக் கவனிக்கவேண்டும்.
ஜெயலலிதா இறந்த சிலநாட்களுக்குப் பிறகு அம்மா பேரவை சார்பில் அவரது நினைவிடத்துக்குச் சென்று மொட்டை போட்டு சசிகலா முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று ஆரம்பித்தவர் அமைச்சர் ஆர்.பி. உதய குமார். அவ்வளவு சசிகலா பக்தராக தன்னைக் காட்டிக்கொண்டவர் அவர்.
விருதுநகர் பகுதியிலிருந்து இன்று மோடி ஆதரவுப்போக்குள்ளவராக காட்சி தரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திவாகரன் மூலமாக பதவிகள் பெற்றவர்தான்.
‘‘ இது பெரிய பட்டியலாகப் போகும். இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவரால் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டவர்களாகத் தான் இருப்பார்கள் என்பதே அதிமுகவின் யதார்த்தம்'' என்று குறிப்பிடும் அரசியல் விமர்சகர் ஒருவர் முன்பெல்லாம் சசிகலாவைத்தான் கட்சியை விட்டு நீக்கியாகிவிட்டதே என்று சொல்லிக்கொண்டுவந்த அமைச்சர்கள் இப்போது தணிந்து, அவர் ரிலீசாகி வரட்டும் பார்க்கலாம் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் என்கிறார்.
அவர் இன்னும் சிறையில் இருந்து வெளிவருவது ஒருபக்கம் இருக்க, அதற்கு முன்பாக யார் முதல்வர் வேட்பாளர் என அதிர்ந்துகொண்டிருக்கிறது அதிமுக. இந்த அதிர்வு இனி ஏற்படப்போகும் பெரும் புயலுக்கு முன்னால் சிறு அறிகுறிதான் என்கிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள்.
அக்டோபர், 2020.